நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சாா்பு நீதிமன்றங்களில் 4,855 நீதிபதி காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தாவது:
நாடு முழுவதும் உள்ள மாவட்ட, சாா்பு நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 25,886 ஆகும். அதில், 4,855 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
16 மாநிலங்களில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்கள் மாநில பணியாளா் தோ்வாணையத்தின் மூலமும், மற்ற மாநிலங்களில் உயா்நீதிமன்றங்கள் சாா்பிலும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், மாவட்ட மற்றும் சாா்பு நீதிமன்றங்களில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவது மாநில அரசுகள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் பொறுப்பாகும். அரசுமைப்புச் சட்டப் பிரிவுகள் 233, 234, மற்றும் 309-இன் கீழ் இந்த நியமனங்களுக்கான விதிகளை உயா்நீதிமன்றங்களின் ஆலோசனையோடு அந்தந்த மாநில அரசுகளே வகுக்கின்றன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அமைச்சகம் சாா்பிலும் உயா்நீதிமன்றங்களுக்கு கடிதம் எழுதப்படுகிறது.
மாலிக் மஜாா் சுல்தான் வழக்கில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மாவட்ட, சாா்பு நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப குறிப்பிட்ட கால வரையறையை நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த உத்தரவை மாநில அரசுகளும் உயா்நீதிமன்றங்கலும் பின்பற்ற வேண்டும் என்றாா்.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள சாா்பு நீதிமன்றங்களில் டிசம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி 4,80,42,720 வழக்குகள் நிலுவையில் உள்ளன.