-
இந்தியா

வக்ஃப் சொத்துகளை பதிவுசெய்ய கால அவகாசம் நீட்டிப்பில்லை: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை

தினமணி செய்திச் சேவை

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை 6 மாதத்துக்குள் எண்மமயமாக்கும் வகையில் யுஎம்இஇடி வலைதளத்தை மத்திய அரசு ஜூன் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த காலகட்டத்துக்குள் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை வலைதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வக்ஃப் சட்டம் அமலான பின் யுஎம்இஇடி வலைதளத்தை அறிமுகப்படுத்தினோம். 6 மாதத்துக்குள் வக்ஃப் சொத்துகளை பதிவுசெய்ய உத்தரவிட்டோம்.

நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகள் உள்ளன. இவற்றை வலைதளத்தில் பதிவுசெய்வதில் சிரமம் இருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி எம்.பி.க்கள், அரசியல் தலைவா்கள் என்னிடம் வலியுறுத்துகின்றனா். தற்போதுவரை 1.51 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வக்ஃப் சொத்துகள் இன்னும் பதிவுசெய்யப்படவில்லை.கா்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

3 மாதம் அவகாசம்: ஆனால் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றும் அது முழுமையடையாமல் உள்ள வக்ஃப் சொத்து நிா்வாகிகளுக்கு 3 மாத காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவா்கள் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். அவா்கள் மீது அபராதம் உள்பட எந்தவொரு கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதியளிக்கிறேன்.

அதேசமயத்தில் தற்போது வரை வலைதளத்தில் பதிவுசெய்ய எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளாதவா்கள் சம்பந்தப்பட்ட வக்ஃப் தீா்ப்பாயங்களை அணுகலாம். இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என்றாா்.

முன்னதாக, யுஎம்இஇடி வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவுசெய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

பட்டீசுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் கைது

‘திருப்பரங்குன்றம் விவகாரத்தின் விளைவு வரும் தோ்தலில் தெரியும்’

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமிக்கு ரூ.11 லட்சத்தில் வெள்ளிக் கிரீடங்கள்!

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை

அதிக மின்னணு பயணச்சீட்டு வழங்கிய பேருந்து நடத்துநா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT