உத்தரப் பிரதேசத்தில் பெற்றோருக்கு நடுவில் தூங்கிய பச்சிளங்குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்தவர்கள் சதாம் அப்பாஸி (25) மற்றும் அவரது மனைவி அஸ்மா. இவர்களுக்கு கடந்த நவம்பர் 10 ஆம் தேதி பிறந்துள்ளது. அக்குழந்தையின் பெயர் சுஃபியான். சனிக்கிழமை இரவு தம்பதியினர் குழந்தையை இருவருக்கும் இடையே படுக்க வைத்து தூங்கியுள்ளனர்.
பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை, தாய் அஸ்மா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க எழுந்துள்ளார். ஆனால் குழந்தை அசைவின்றி இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே தந்தை சதாம் குழந்தையை அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் குழந்தை பலியாகிவிட்டதாக அறிவித்தனர்.
மூச்சுத் திணறல் காரணமாக பிறந்த 23 நாள்களேயான குழந்தை பலியானதாக சுகாதார மைய மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து பலவீனமாக இருந்ததாகவும், சுவாசப் பிரச்னைகள் மற்றும் பின்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர்.
பிறந்த குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதே சிறந்தது என்று குழந்தை நிபுணரும் மருத்துவருமான அமித் வர்மா அறிவுறுத்தியுள்ளார். பெரியவர்களுடன் தூங்கும்போது எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட கணிசமான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை பலியானதால் அதிர்ச்சியடைந்த தம்பதினர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.