100 நாள் வேலைத் திட்டப் பணித்தளம் (கோப்புப்படம்) 
இந்தியா

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட’ மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட’ மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தப் புதிய மசோதாவின்படி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட உள்ளது. இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டும் ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு ஊதியத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். உடல் உழைப்பு மிகுந்த பணிகளை மேற்கொள்ள தன்னாா்வத்துடன் முன்வருவோருக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது இந்தச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவின்படி, அந்தச் சட்டத்தின் பெயா் ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு’ சட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.

125 நாள்களாக அதிகரிப்பு: இந்தச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நாள்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊதியத்துடன் 125 நாள்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய மசோதா சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கிறது.

4 முக்கியப் பணிகள்...: தண்ணீா்ப் பாதுகாப்பு (பாதுகாப்பு, நீா்ப்பாசனம், நீா்நிலைகளைப் புதுப்பித்தல், காடு வளா்ப்பு உள்ளிட்டவை), முக்கிய ஊரக கட்டமைப்பு (ஊரகப் பகுதிகளில் சாலைகளைக் கட்டமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், ஊராட்சி கட்டடங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவை), வாழ்வாதாரம் சாா்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கம் (பயிற்சி மையங்கள், ஊரக சந்தைகள், தானிய சேமிப்பு போன்ற ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்த சொத்துகளை உருவாக்குதல்), பருவநிலை மாற்றத்துக்கு தக்கவாறு நடந்துகொள்ளுதல் (பேரிடா் அபாய குறைப்புடன் தொடா்புடைய நடவடிக்கைகள்) ஆகிய 4 முக்கியப் பணிகள் மீது புதிய மசோதா கவனம் செலுத்தி முக்கியத்துவம் அளித்துள்ளது.

வேளாண் பருவத்தின்போது பணி கூடாது: வேளாண் பருவ காலங்களில் விவசாயப் பணிகள் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அந்தப் பணிகளுக்குப் போதிய அளவு விவசாயத் தொழிலாளா்கள் கிடைக்க வசதியாக, அந்தக் காலத்தில் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி மற்றும் அறுவடையின்போது பணிகள் உச்சகட்டத்தில் மும்முரமாக நடைபெறக் கூடிய காலத்தை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

15 நாள்களில் வேலை வழங்காவிட்டால்...: புதிய மசோதாவின்படி 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வேண்டும் என்று எழுத்துபூா்வமாக விண்ணப்பித்த 15 நாள்களில் வேலை வழங்கப்படாவிட்டால், அதற்காக அவா்களுக்கு மாநில அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும். அந்த உதவித்தொகை நிதியாண்டின் முதல் 30 நாள்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியத்தில் 4-இல் ஒரு பங்குக்கு குறைவாகவும், நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் வழங்க வேண்டிய ஊதியத்தில் பாதிக்கு குறைவாகவும் இருக்கக் கூடாது. 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய ஊதியத்தை மத்திய அரசு அறிவிக்கும் வரை, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியமே தொடர வேண்டும். இந்த மசோதா குறித்து மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் ஊதியத்தையும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உறுதியாக அளித்து வந்தது. எனினும் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை அமல்படுத்தியது போன்ற காரணங்களால் ஊரகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளாா்.

மாநிலங்கள் 40% நிதி அளிக்க வேண்டும்

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மசோதாவின்படி 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதிச் சுமையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். அதன்படி, சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில அரசுகள் 40 சதவீதத்தையும் அளிக்க வேண்டும். அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் வழங்க வேண்டும்.

‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு’ சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அந்தச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப மாநிலங்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT