நாட்டிலேயே மிக அதிகமாக ஆந்திர தலைநகா் அமராவதியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.109.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் யூனியன் பிரதேசமான அந்தமான்-நிகோபாா் தீவுகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மிகக் குறைவாக ரூ.82.46-க்கு விற்கப்படுகிறது.
மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளாா். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி (வாட்) விதிக்கிறது. இது தவிர மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வெவ்வேறு விகிதங்களில் மதிப்புக் கூட்டு வரி, உள்ளூா் கூடுதல் வரிகளை விதிக்கின்றன. இதன் காரணமாக மாநிலங்களில் விலை வேறுபாடு ஏற்படுகிறது.
ஆந்திரத்தில் மிக அதிகமாக ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.109.74-ஆக உள்ளது. அங்கு மாநில அரசு ரூ.29.06 மதிப்புக் கூட்டு வரி விதிக்கிறது. அந்தமானில் பெட்ரோல் விலை நாட்டிலேயே மிகக் குறைவாக ரூ.82.46-ஆக உள்ளது. அங்கு மதிப்புக் கூட்டு வரி 82 காசு மட்டும்தான்.
ஆந்திரத்தில் டீசல் விலையும் நாட்டிலேயே மிக அதிகமாக ஒரு லிட்டா் ரூ.97.57-ஆக உள்ளது. இதில் 21.56 மதிப்புக் கூட்டு வரியாகும். அந்தமானில் டீசல் விலை மிகக் குறைவாக ரூ.78.05-ஆக உள்ளது. மதிப்புக் கூட்டு வரி 77 காசு.
ஆந்திரத்தை அடுத்து கேரளம் (ரூ.107.48), தெலங்கானா (ரூ.107.46) ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இதேபோல டீசல் விலை கேரளத்தில் ரூ.96.48, தெலங்கானாவில் ரூ.95.70-ஆக உள்ளது.
மத்திய பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், தமிழ்நாடு (ரூ.100.80), ஒடிஸா, மேற்கு வங்கம், கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் உள்ளது. தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.94.77-ஆக உள்ளது.
நுகா்வோா் நலன் கருதி 2021, 2022-ஆம் ஆண்டுகளில் மத்திய கலால் வரி குறைக்கப்பட்டது. இருமுறையும் சோ்த்து பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.13, டீசல் மீது லிட்டருக்கு ரூ.16 குறைந்தது. கரோனா காலத்தில் அதிகரிக்கப்பட்ட கலால் வரியும் திரும்பப் பெறப்பட்டது.
2024 மாா்ச் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்தன. இந்த ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி மீண்டும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டாலும், அது மக்கள் மீது சுமையாக ஏற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.