தில்லி காற்றுமாசு: தில்லியில் புதன்கிழமை காலை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், காற்றின் தரக் குறியீடானது 328 புள்ளிகளுடன் ’மிக மோசம்’ பிரிவில் உள்ளது.
தில்லியின் காற்றின் தரக் குறியீடு கடந்த சில வாரங்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை - 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் 498 புள்ளிகளைத் தொட்டு அதிர்ச்சி அளித்தது. சுவாசிக்க இயலாத வகையில் நச்சுப்புகை மூண்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மேலும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானத்துக்கு தடை, பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும், பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அதேபோல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று பெட்ரோல் நிலையங்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் காற்றின் தரம் படிப்படையாக மேம்பட்டு வருகின்றது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு 354 புள்ளியாக இருந்த நிலையில், தற்போது மேலும் மேம்பட்டுள்ளது.
0 முதல் 50 புள்ளிகள் வரை ‘நல்லது’, 51 முதல் 100 ‘திருப்தி’கரமானது, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ’மோசமானது’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.