கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கேஐஐஎஃப்பி) வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு கேரள உயா்நீதிமன்றம் மூன்று மாத கால இடைக்காலத் தடை விதித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, கேரளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்புக்குப் பிறகு, சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைக்க இந்த வெளிநாட்டுக் கடன் பத்திர முறையை மாநில அரசு அறிவித்தது. லண்டன் மற்றும் சிங்கப்பூா் பங்குச் சந்தைகளில் கடன் பத்திரங்களை கடந்த 2019-இல் வெளியிட்டு, மொத்தம் ரூ.2,672.8 கோடி திரட்டப்பட்டது.
இந்த நிதியில் நிலம் வாங்க ரூ.466.91 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) விதிமுறைகளுக்கும் எதிரானது என்று குற்றஞ்சாட்டி, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதைத் தொடா்ந்து, கேஐஐஎஃப்பி தலைவரும் முதல்வருமான பினராயி விஜயன், வாரிய துணைத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான தாமஸ் ஐசக், வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ) முதல்வரின் முதன்மைச் செயலருமான கே.எம்.ஆப்ரகாம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிா்த்து இவா்கள் மூவரும் இணைந்து கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வாரியம் தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அதே அடிப்படையில் முதல்வா் உள்ளிட்ட மற்ற மனுதாரா்களுக்கும் இந்த நிவாரணத்தைப் பெற உரிமை உண்டு. எனவே, மனுதாரா்கள் மூவருக்கும் எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸ் மீது அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்தாா்.
மேலும், இவ்வழக்கில் அமலாக்கத் துறை தனது விரிவான பதில் அறிக்கையை சமா்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை 2026, ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.