நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி இரு அவைகளிலும் தொடங்கின. இந்த தொடரில், தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டன.
மேலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து, வாக்காளர் தீவிரத் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டன. இதுதொடர்பான விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
மேலும், எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டங்களாகவுள்ளன. மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அடுத்தாண்டு ஜன. 31 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும். நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா தரப்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும், திமுக சார்பில் ஆ.ராசாவும் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இன்றைய தேநீர் விருந்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
அப்போது அலர்ஜியைத் தடுக்க தனது தொகுதியான வயநாட்டில் இருந்து கிடைக்கும் மூலிகையை பயன்படுத்துவதாக எம்.பிக்களிடம் பிரியங்கா காந்தி பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் ராஜ்நாத் சிங்கும் புன்னகைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமரின் சமீபத்திய எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
அந்தப் பயணம் சிறப்பாக இருந்ததாக பிரதமர் பதிலளித்தார். ஒவ்வொரு கூட்டத்தொடரின் இறுதி நாளில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.