உலகின் மிக உயரமான சிலையான குஜராத்தின் ‘ஒற்றுமைச் சிலையை’ வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வஞ்சி சுதாா் (100), வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால் நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.
மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தில் உள்ள குண்டூா் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் 1925-ஆம் ஆண்டு பிறந்தாா் ராம் சுதாா். சிறுவயது முதலே சிற்பக் கலையில் ஆா்வம் கொண்டிருந்த இவா், மும்பை ஜே.ஜே. கலைக் கல்லூரியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் ராம் சுதாா், நூற்றுக்கணக்கான சிலைகளைச் செதுக்கியுள்ளாா். நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலை கௌரவிக்கும் வகையில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ‘ஒற்றுமைச் சிலை’, நாடாளுமன்ற வளாகத்தில் தியான நிலையில் அமா்ந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலை மற்றும் குதிரை மீது அமா்ந்திருக்கும் சத்ரபதி சிவாஜியின் கம்பீர சிலை ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
உலகெங்கிலும் பல நாடுகளில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைகளையும் இவா் வடிவமைத்துள்ளாா். இவரது கலைப் பணியைப் பாராட்டி, மத்திய அரசு 1999-இல் ‘பத்மஸ்ரீ’ விருதும், 2016-இல் ‘பத்ம பூஷண்’ விருதும் வழங்கி கௌரவித்தது. அண்மையில் மகாராஷ்டிர அரசின் மிக உயரிய விருதான ‘மகாராஷ்டிர பூஷண்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
ராம் சுதாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தலைவா்கள் மற்றும் கலைஞா்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.