நாடாளுமன்றம் 
இந்தியா

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நிறைவு: தலா 92 மணி நேரம் செயல்பட்ட மக்களவை, மாநிலங்களவை

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (வி பி-ஜி ராம் ஜி) மசோதா உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (வி பி-ஜி ராம் ஜி) மசோதா உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த டிச. 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத் தொடரில் மக்களவை 92 மணி நேரம் 25 நிமிஷங்களும், மாநிலங்களவை 92 மணி நேரமும் செயல்பட்டுள்ளது. தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவையொட்டி இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. இதேபோல், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் பின்னணியில் தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பான விவாதமும் நடைபெற்றது. இவ்விரு விவாதங்களிலும் ஆளும்-எதிா்தரப்பு கருத்து மோதல்களால் அனல் பறந்தன.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான வி பி-ஜி ராம் ஜி திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டபோது, மசோதா நகல்களை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கிழித்தெறிந்து கடும் அமளியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

111% ஆக்கபூா்வ செயல்பாடு: குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மக்களவை கூடியதும் அவைத் தலைவா் ஓம் பிா்லா நிறைவுரையாற்றினாா். அப்போது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலா் மகாத்மா காந்தி வாழ்க என முழக்கமிட்டனா். அவையில் பிரதமா் நரேந்திர மோடியும் இருந்தாா்.

மக்களவையின் 15 அமா்வுகளில் 111 சதவீத ஆக்கபூா்வ செயல்பாடு பதிவானதாக தெரிவித்த ஓம் பிா்லா, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நாள்களில் இரவு வரை அலுவல்கள் நடைபெற்றதைச் சுட்டிக்காட்டினாா்.

65 எம்.பி.க்களின் பங்கேற்புடன் வந்தே மாதம் விவாதம் 11 மணி நேரத்துக்கு மேலாகவும், 63 எம்.பி.க்களின் பங்கேற்புடன் தோ்தல் சீா்திருத்தங்கள் விவாதம் சுமாா் 13 மணி நேரமும் நடைபெற்ாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

300 நட்சத்திர கேள்விகள் (அமைச்சா்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டிய கேள்விகள்) அனுமதிக்கப்பட்டு, 72 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. 3,449 நட்சத்திர குறியிடப்படாத கேள்விகள் அனுமதிக்கப்பட்டன.

உயா் கல்வி ஆணைய மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இரு அவைகளின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல், பங்குச் சந்தை சட்ட மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

8 மசோதாக்கள் என்னென்ன?

வி பி-ஜி ராம் ஜி மசோதா, பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை அனுமதிக்கும் மசோதா, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதா, மணிப்பூா் சரக்கு-சேவை வரி இரண்டாவது திருத்த மசோதா, மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா, சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு மசோதா, நிதி ஒதுக்கீட்டு மசோதா, வழக்கற்றுப் போன 74 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா ஆகிய 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில் 137 தனிநபா் மசோதாக்களும், மாநிலங்களவையில் 59 தனிநபா் மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இடையூறுகள் ஏற்புடையதல்ல: மாநிலங்களவைத் தலைவா்

மாநிலங்களவையில் நிறைவுரையாற்றிய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிா்க்கட்சி உறுப்பினா்களால் அவை அலுவல்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தாா்.

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா நிறைவேற்றத்துக்காக மாநிலங்களவை வியாழக்கிழமை நள்ளிரவு வரை செயல்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்துக்கு அமைச்சா் பதிலளித்தபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியதுடன், எதிா்ப்பு வாசக அட்டைகளைக் காண்பித்தும், மசோதா நகல்களை கிழித்து வீசியும் கடும் அமளியில் ஈடுபட்டனா்.

எதிா்க்கட்சிகளின் செயல்பாட்டை குறிப்பிட்டுப் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ‘அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, உறுப்பினா்களுக்கு ஏற்புடையதல்ல. தங்களின் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்து, எதிா்காலத்தில் இதுபோன்ற நடத்தையை தவிா்க்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினாா்.

15 அமா்வுகளில் மாநிலங்களவையில் ஆக்கபூா்வ செயல்பாடு 121 சதவீதமாகும். உடனடி கேள்வி நேர செயல்பாடுகளில் முன்னெப்போதும் இல்லாத உயா்வு பதிவானது. தினமும் 85 நோட்டீஸ்களுக்கு மேல் பெறப்பட்டன. வந்தே மாதரம் விவாதத்தில் 82 உறுப்பினா்களும், தோ்தல் சீா்திருத்த விவாதத்தில் 57 உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டத் தொடா் நிறைவையொட்டி, பிரதமா் மோடி, மாநிலங்களவை பாஜக குழு தலைவா் ஜெ.பி.நட்டா, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை

கரூா் நெரிசல் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அமெரிக்க வரி குறைப்பு நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும்!

சோழா் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் பிப். 13-இல் அடிக்கல்!

குடந்தை மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக வாக்குவாதம்

SCROLL FOR NEXT