சட்டவிரோதமாக நாட்டில் ஊடுருவியவர்களுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் திப்ருகர் பகுதியில் அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களை ஏமாற்றியதாகவும் விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஏனெனில் அக்கட்சி வங்கதேச குடியேறிகளை விரும்புகிறது. ஊடுருவல்காரர்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கை மற்றும் வாக்கு வங்கி அரசியலில் இருந்து அசாமை நாம் காப்பாற்ற வேண்டும்.
இன்று, வளர்ச்சியின் முழுப் பலன்களும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் ஏழ்மையான மக்களைச் சென்றடைந்துள்ளன. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
இயற்கை விவசாயத்தில் நாட்டிற்கு அசாம் மாநிலத்தால் தலைமை தாங்க முடியும். வடகிழக்கிற்கான பாமாயில் மிஷன், நாட்டிற்குத் தேவையான சமையல் எண்ணெயில் தன்னிறைவு பெற உதவும்.
விவசாயிகளின் நலன்களை முதன்மையாகக் கொண்டு எங்கள் அரசு செயல்படுகிறது. திப்ருகரில் உள்ள நம்ரூப் உரத்தொழில் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து உரங்களை வழங்குவதை உறுதிசெய்யும்.
அசாம் மற்றும் முழு வடகிழக்குப் பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
நம்ரூப்பில் அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் குவஹாத்தியில் புதிய விமான நிலைய முனையத்தின் திறப்பு விழா ஆகியவை இந்தப் பிராந்தியத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு முதன்மையான எடுத்துக்காட்டுகள் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.