வங்கதேச இடைக்கால அரசால் இந்தியாவுக்கு எதிரான பகைமை தீவிரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாணவர் தலைவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32) துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனால் அங்கு கடந்த சில நாள்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஹாதியை சுட்டதாக கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத் மற்றும் ஆலம்கிர் ஷேக் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பியதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் உள்ள சட்டோகிராம் தூகரகம் உள்பட இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பல்வேறு கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஷேக் ஹசீனா பதிலளித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக அதிகரித்து விரோதப் போக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷேக் ஹசீனா தெரிவித்ததாவது:
“வங்கதேசத்தில் சமீபகாலத்தில் உருவாகியிருக்கும் பதட்டமான சூழல், வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. யூனுஸின் இடைக்கால ஆட்சியால் வலுவடைந்திருக்கும் தீவிரவாதிகளால் இந்த விரோதம் உருவாக்கப்படுகிறது.
இவர்கள்தான் இந்தியத் தூதரகம், ஊடக அலுவலகங்கள் மற்றும் சிறுபான்மையினரை எந்த தடையுமின்றி தாக்குபவர்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு தப்பி ஓடச் செய்தவர்கள். யூனுஸ், அத்தகைய நபர்களை பதவியில் அமர்த்தி, தண்டனைப் பெற்ற பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்துள்ளார்.
பொறுப்பான அரசாங்கமாக இருந்தால், தூதரகத்தைப் பாதுகாத்து, அவர்களை அச்சுறுத்துபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும். மாறாக, குண்டர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களைப் போராளிகள் என்றழைக்கிறார் யூனுஸ்.” எனத் தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தன்னை குற்றவாளியாக அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷேக் ஹசீனா தெரிவித்ததாவது:
இந்தத் தீர்ப்புக்கும் நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. என்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது.
அவாமி லீக்கிற்கு எதிராக பழிவாங்கும் வேட்டைக்காக இந்த தீர்ப்பாயம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், வங்கதேசத்தின் விசாரணை அமைப்புகள் மீது எனக்குள்ள நம்பிக்கை இழக்கவில்லை. நமது அரசியலமைப்பு மரபு வலிமையானது. சட்டப்பூர்வமான ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நமது நீதித்துறை அதன் சுதந்திரத்தை மீண்டும் பெறும்போது, நீதி வெல்லும்.” என்றார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹசீனா, “அவாமி லீக் இல்லாத தேர்தல், தேர்தலே அல்ல. அது ஒரு முடிசூட்டு விழா” எனத் தெரிவித்தார்.
மேலும், எனக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு நான் மனமகிழ்ச்சியும் நன்றியும் அடைகிறேன் என்று ஹசீனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.