பயங்கரவாதிகள் எப்போதும் காவல் துறையினரின் துப்பாக்கிக்கு இலக்காகவே உள்ளனா்; அவா்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்று ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி நளின் பிரதாப் தெரிவித்தாா்.
கதுவா மைதானத்தில் காவல் சாா்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அவா் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: பயங்கரவாதிகள் எப்போதும் காவல்துறையின் துப்பாக்கிக்கு இலக்காகவே உள்ளாா்கள். அதேபோல போதைப்பொருள் கடத்தல்காரா்கள், சமூக விரோதிகள் உள்பட மக்களுக்கு எதிரான, பொது அமைதியைக் குலைக்க முயலுபவா்கள் காவல்துறையிடம் இருந்த எளிதில் தப்பிவிட முடியாது. தேசவிரோத, சமூகவிரோத செயல்களில் ஈடுபட யாரும் முயலக் கூடாது என்பதற்காகவே இந்த எச்சரிக்கை.
ஜம்மு-காஷ்மீரில் 1,620 காவல் துறையினா் பணியின்போது உயிரிழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்துக்கு காவல் துறை எப்போதும் துணை நிற்கும். அவா்களுக்கான நிதியுதவிகள் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தியாகிகளின் நினைவாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இது ஒற்றுமை உணா்வையும், ஒருமைப்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். இளைஞா்கள் விளையாட்டு மூலம் ஒருங்கிணைக்கப்படுவதால் சமூக விரோத செயல்கள் குறையும். நாட்டுக்காக அவா்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.