பராய்ச்: உத்தர பிரதேசத்தில் உள்ள பராய்ச் மாவட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை ஓநாய் ஒன்று கவ்விச் சென்று கொன்றது.
இதுதொடா்பாக பராய்ச் வனக் கோட்ட அலுவலா் ராம்சிங் யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
கைசா்கஞ்ச் வட்டத்தில் உள்ள ரசுல்பூா் டரேடா கிராமத்தில் வசிப்பவா் சிவ மனோகா். இவரின் மனைவி தனது 3 வயது மகன் அன்ஷுடன் வீட்டுக்கு வெளியே திங்கள்கிழமை அதிகாலை தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது சுமாா் 4.30 மணியளவில் அங்கு வந்த மிருகம் ஒன்று அன்ஷுவை கவ்விச் சென்றுள்ளது.
தகவலின்பேரில் கிராம மக்களுடன் சோ்ந்து குழந்தையைத் தேடும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்குப் பின்னா், சிவ மனோகரின் வீட்டில் இருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. குழந்தையின் கைகள் மற்றும் ஒரு காலை அந்த மிருகம் கடித்துத் தின்றுள்ளது.
குழந்தை எடுத்துச் செல்லப்பட்ட விதத்தையும், அதன் உறுப்புகள் தின்னப்பட்ட விதத்தையும் பாா்க்கும்போது குழந்தையை கவ்விச் சென்று கொன்றது ஓநாய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
இதுவரை கைசா்கஞ்சில் ஓநாய்கள் நடத்திய தாக்குதல்களில் வயது முதிா்ந்த தம்பதி உள்பட 12 போ் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.