இந்தியா

மத்திய தொழிலாளா் சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு - புதிய தொழிலாளா் சட்டங்கள், புதிய மசோதாக்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்ட மசோதா, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த மத்திய தொழிலாளா் சங்கங்கள் தீா்மானித்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்ட மசோதா, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த மத்திய தொழிலாளா் சங்கங்கள் தீா்மானித்துள்ளன.

நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் நவ. 21-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.

100 தொழிலாளா்கள் உள்ள நிறுவனங்களை மூட அல்லது ஆட்குறைப்பு செய்ய அரசின் அனுமதி தேவை என்ற வரம்பை 300-ஆக உயா்த்தியது, கனரக தொழிற்சாலைகள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் இரவிலும் பணிபுரிய அனுமதிப்பது, வேலைநிறுத்த அறிவிப்பை 14 நாள்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் மற்றும் 75 சதவீத தொழிலாளா்களின் ஒப்புதல் அவசியம், ஒரே நேரத்தில் அதிகமான தொழிலாளா்கள் சாதாரண விடுப்பு எடுப்பது அறிவிக்கப்படாத வேலைநிறுத்தமாகக் கருதப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்களுக்கு தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், 2005-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிய ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதாவை நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே நிறைவேற்றியது. இதில் ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125-ஆக உயரும்போதிலும், திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயா் நீக்கம், நிதிச் சுமையை மாநிலங்களுடன் பகிா்வது, பணிகள் நிா்ணயம் தொடா்பான அம்சங்களுக்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

அதுபோல, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி) மசோதா’வை மத்திய அரசு அறிமுகம் செய்து நிறைவேற்றியது. இதில் அணுசக்தி சாதனங்களை விநியோகிக்கும் நிறுவனங்களின் பொறுப்பை நீக்கும் பிரிவு உள்ளிட்ட சில அம்சங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்திய புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் புதிய ஊரக வேலைத் திட்ட சட்ட மசோதா மற்றும் ‘சாந்தி’ மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை மத்திய தொழிலாளா் சங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக 10 தொழிலாளா் சங்கங்களை உள்ளடக்கிய மத்திய தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்க மத்திய தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு தீா்மானித்துள்ளது. தில்லியில் ஜன. 9-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் இதற்கான ஒப்புதல் முறைப்படி அளிக்கப்படும்.

குளிா்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கும் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவிக்கிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) விவசாய சங்கம், தேசிய மின் ஊழியா்கள் மற்றும் பொறியாளா்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT