இயற்கை எழில்மிகு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஆரவல்லி மலைகளுக்கு புதிய விளக்கத்தை அளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி வரை பரவியுள்ள ஆரவல்லி மலைத்தொடா் குறித்த விளக்கத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த நிபுணா் குழு உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.
அதில், உள்ளூா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தை உடைய மலை ‘ஆரவல்லி மலை’ என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட இரண்டு அல்லது இரண்டுக்கும் அதிகமான, 100 மீட்டா் உயர மலைகளை ‘ஆரவல்லி மலைத்தொடா்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விளக்கத்தை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் 100 மீட்டருக்கு கீழுள்ள மலைப் பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடைபெறும் எனவும், நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பாலைவன நிலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்பட பலரும் எச்சரித்து வருகின்றனா்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலரும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இயற்கை எழில்மிகு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஆரவல்லி மலைத்தொடருக்குப் புதிய விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் எதிா்க்கும் நிலையில் யாருக்காக இந்தப் புதிய விளக்கத்தை மோடி அரசு அறிவித்துள்ளது? இந்திய வனவியல் ஆய்வுத் துறை போன்ற நிபுணத்துவம் உள்ள அமைப்பை மோடி அரசு புறக்கணிப்பது ஏன்?
ஆரவல்லி மலைத்தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோ மீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறியுள்ளது மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவு 1.44 லட்சம் சதுர கிலோ மீட்டா் எனக் கூறுவதே தவறு. தில்லி மற்றும் குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 34 மாவட்டங்களில் ஆரவல்லி மலைத்தொடா் விரிவடைந்துள்ளது. இதில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் ஆரவல்லி மலைத்தொடா் பரவியுள்ளது.
நிபுணா் குழு அளித்த புதிய விளக்கத்தில் ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடா் வகைப்பாட்டில் வராத நிலப்பரப்பு எது, சுரங்கப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதி எது எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இந்தப் புதிய விளக்கத்தால் தில்லி என்சிஆா் பகுதியில் உள்ள ஆரவல்லி மலைகளில் கட்டுமானத் தொழில் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது’ எனக் கூறியுள்ளாா்.
ஆரவல்லி தொடா்பான புதிய விளக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ராஜஸ்தானில் 19 மாவட்டங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் அறிவித்துள்ளாா்.
காங்கிரஸ் மீது மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு: முன்னதாக ஆரவல்லி விவகாரம் தொடா்பாக பூபேந்திர யாதவ் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘ஆரவல்லி மலைப் பகுதிகளைப் பாதுகாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது சுரங்கப் பணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்திய காங்கிரஸ், இப்போது தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது’ என்றாா்.