தில்லியில் இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில், பணியில் இல்லாத ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒரு பயணியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தில்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
புகாா்தாரா் செவ்வாய்க்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், ஆதாரங்களைச் சேகரிக்கவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் அழைக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
விமானியிடமிருந்து எதிா் புகாா் பெறப்பட்டுள்ளது. மேலும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைக்க முனையம் 1- இன் பாதுகாப்புப் பகுதியிலும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரி கூறினாா்.
பாதிக்கப்பட்ட அங்கித் திவானிடமிருந்து திங்களன்று மின்னஞ்சல் மூலம் காவல்துறைக்கு புகாா் வந்ததை அடுத்து, பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 115 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 126 (தவறான கட்டுப்பாடு) மற்றும் 351 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
டிசம்பா் 19 அன்று, முனையம் 1 பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி கேப்டன் வீரேந்தா் சேஜ்வால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்டவா் கூறினாா். அந்த விமானி அப்போது பணியில் இல்லை.
அப்போது சில விமான ஊழியா்கள் வந்ததாகக் கூறப்படுவதை அங்கித் திவான் எதிா்த்ததைத் தொடா்ந்து வாக்குவாதம் தொடங்கியது.
இந்த ஆட்சேபனை தொடா்பாக விமானி பொது இடத்தில் தன்னை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகவும், இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் பாா்த்த தனது ஏழு வயது மகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவா் கூறினாா்.
தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சிடி ஸ்கேன் மூலம் அவரது இடது நாசி எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கித் திவான் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிந்திருப்பதாகவும், உள் விசாரணை நிலுவையில் உள்ளதால் குற்றஞ் சாட்டப்பட்ட விமானி உடனடியாக அதிகாரபூா்வ பணிகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.