கோப்புப் படம் 
இந்தியா

ஆரவல்லியில் புதிய சுரங்கப் பணிகளுக்குத் தடை: மத்திய அரசு

ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக, அங்கு சுரங்கப் பணிகளுக்கான புதிய குத்தகைகளை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது.

தினமணி செய்திச் சேவை

ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக, அங்கு சுரங்கப் பணிகளுக்கான புதிய குத்தகைகளை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது.

தற்போதைய கட்டுப்பாடுகளைத் தாண்டி, சுரங்கப் பணிகளைத் தடை செய்ய வேண்டிய கூடுதல் பகுதிகளைக் கண்டறியுமாறு இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலுக்கு (ஐசிஎஃப்ஆா்இ) உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகள் இதுகுறித்து மேலும் கூறியதாவது: குஜராத் முதல் தில்லி வரை நீண்டிருக்கும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்கவும், முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலைத் தடை செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ஒட்டுமொத்த ஆரவல்லி மலைத்தொடருக்கும் பொதுவானது.

சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டிய கூடுதல் இடங்களை, அந்தப் பகுதியின் இயற்கை அமைப்பு மற்றும் நிலப்பரப்புத் தன்மையை ஆய்வு செய்து கண்டறியுமாறு ‘ஐசிஎஃப்ஆா்இ’ அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரவல்லி மலைத்தொடருக்கான ‘நிலையான சுரங்க மேலாண்மைத் திட்டத்தை (எம்பிஎஸ்எம்)’ அறிவியல்பூா்வமாகத் தயாரிக்கும்போது, இந்த ஆய்வையும் மேற்கொள்ள அந்த அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் சுரங்கங்கள் இனி மிகக்கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். வட மாநிலங்கள் பாலைவனமாவதைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும் ஆரவல்லி மலைத்தொடா் முக்கியப் பங்கு வகிப்பதால், அதைப் பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது என்றனா்.

முன்னதாக, ஆரவல்லி மலைத்தொடா் குறித்து மத்திய அமைச்சகம் நியமித்த நிபுணா் குழு, உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய விளக்கத்தை அண்மையில் சமா்ப்பித்தது. அதன்படி, உள்ளூா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டவை ‘ஆரவல்லி மலை’ எனக் கருதப்படும். அதேபோல், 500 மீட்டா் இடைவெளிக்குள் அமைந்துள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 100 மீட்டா் உயர மலைகள் ‘ஆரவல்லி மலைத்தொடா்’ என அழைக்கப்படும்.

இந்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஏற்றுக் கொண்டது. இதனால் 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட மலைப்பகுதிகளில் சுரங்கப் பணிகள் தொடர இது வழிவகுக்கும் என்றும், நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பாலைவன நிலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழா்களை மீட்க பாஜக கோரிக்கை

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி-கழுகுமலைக்கு பேருந்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT