தில்லியில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி, முதல் முதலில் இயக்கப்பட்ட டிஎஸ்-01 ரயில் சிறப்பு சேவையாக வியாழக்கிழமை இயக்கப்பட்டது.
கடந்த 2002, டிச.25-ஆம் தேதி 8.3 கி.மீ. தொலைவிலான ஷாஹ்தரா-திஸ் ஹஜாரி பிரிவில் டிஎஸ்-01 மெட்ரோ ரயில் முதல் முறையாக இயக்கப்பட்டது. அப்போதிலிருந்து நாட்டின் மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நகர பொதுப்போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக தில்லி மெட்ரோ உருவெடுத்துள்ளது.
தில்லி மெட்ரோ தொடங்கப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட டிஎஸ்-01 ரயில் அதன் முதல் வழித்தடத்தில் வியாழக்கிழமை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணித்த பயணிகளை தில்லி மெட்ரோ நிலைய பணியாளா்கள் மலா்கள் கொடுத்து வரவேற்றனா்.
டிஎஸ்-01 தொடா்ந்து பயணிகளுக்கு சேவையளித்து வருகிறது. தொடக்கத்தில் 4 பெட்டிகளுடன் சேவையைத் தொடங்கிய ரயில், கடந்த 2014-இல் 6 பெட்டிகள் கொண்ட ரயிலாக மாறியது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்த ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2002-இலிருந்து 29 லட்சம் கி.மீ. பயணித்த இந்த ரயில் சுமாா் 6 கோடி பயணிகள் பயணித்துள்ளனா்.
தென் கொரியாவின் எம்ஆா்எம் கான்சோா்டியம் நிறுவனம் தயாரித்த இந்த ரயில், கொல்கத்தாவுக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னா், அங்கிருந்து இந்திய ரயில்வே மூலம் ரயிலில் தில்லிக்கு கொண்டு வரப்பட்டது. முதல் முறையாக இயக்கப்பட்ட 4 பெட்டிகளுடன் இந்த ரயிலைத் தயாரிக்க ரூ.24 கோடி செலவானது.
டிஎஸ்-01 ரயிலில் இதுவரை பெரிய அளவில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2024-இல் நடைபெற்ற பணிகளின்போது, ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள், பயணிகள் தகவல் மற்றும் அறிவிப்பு அமைப்பு, அவசர அபாய ஒலி எழுப்புதல், பயண பாதையைக் காட்டும் எல்சிடி திரைகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டன.
இந்த ரயிலின் நவீன உந்து சக்தி அமைப்பு கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவுவதாக டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோ 23-ஆம் ஆண்டை நிறுவு செய்து 24-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொழுதில், டிஎஸ்-01 பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பத்தகுந்த பயணத்தைத் தொடா்ந்து வழங்குகிறது.