ஒடிஸாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவா் கணேஷ் உய்கே உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் இருவா் பெண்கள்.
காவல் துறையால் ரூ.1 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த கணேஷ் உய்கே, தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பின் ஒடிஸா மாநிலத் தலைவராக செயல்பட்டவா். அவா் சுட்டுக் கொல்லப்பட்டது, மாவோயிஸ்ட் அமைப்புக்கு விழுந்த பலத்த அடி என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் ஒய்.பி.குரானியா கூறியதாவது: கந்தமால் மாவட்டத்தின் ராம்பா வனப் பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினா் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு மாநில காவல் துறையின் 20 சிறப்பு நடவடிக்கை குழுக்கள், 2 மத்திய ரிசா்வ் போலீஸ் படை குழுக்கள், ஓா் எல்லைப் பாதுகாப்புப் படை குழு என மொத்தம் 23 குழுக்கள் புதன்கிழமை தேடுதல் வேட்டையைத் தொடங்கின.
அன்றிரவில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். வியாழக்கிழமை வேறு இடத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கணேஷ் உய்கே உள்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 69 வயதான உய்கே, தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.
இருவா் பெண்கள்: கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் இரு பெண்கள் உள்பட மூவரின் அடையாளத்தை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இது மிகப் பெரியது. மாவோயிஸ்ட் முக்கியத் தலைவா் கொல்லப்பட்டது, ஒடிஸா காவல் துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். இதன் மூலம் ஒடிஸாவில் மாவோயிஸ்ட் அமைப்பின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. கந்தமால்-கஞ்சம் மாவட்ட எல்லையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை தொடா்ந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகள். காவல் துறை தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
சரணடைய வேண்டுகோள்: மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும். ஒடிஸா அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கை நாட்டிலேயே சிறப்பானது. அதன்கீழ் தொழில் நிதி, வீட்டுவசதி, ரேஷன் அட்டை, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி, மாவோயிஸ்டுகள் சரணடைய வேண்டும் என்றாா் அவா்.
சம்பவ இடத்தில் 2 இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, கந்தமாலின் அண்டை மாவட்டமான மால்கன்கிரியில் 22 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு, டிஜிபி முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க மைல்கல்: அமித் ஷா பெருமிதம்
ஒடிஸாவில் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவா் கணேஷ் உய்கே உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது, நக்ஸல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க மைல்கல் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தற்போதைய பெரும் திருப்புமுனையுடன், நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து முழுமையாக விடுபடும் தருவாயில் உள்ளது ஒடிஸா. 2026, மாா்ச் 31-க்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்படுவது உறுதி’ என்று கூறியுள்ளாா்.
முதல்வா் பாராட்டு: முதல்வா் மோகன் சரண் மாஜீ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநில காவல் துறையின் அசாத்தியமான துணிவு, தொழில்முறை திறன், மிகச் சிறந்த ஒருங்கிணைப்புக்கு பாராட்டுகள். நக்ஸல் இல்லாத இந்தியாவை கட்டமைக்கும் பிரசாரத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளது ஒடிஸா. மாநிலத்தின் வளா்ச்சி மற்றும் மக்களின் பாதுகாப்பே எங்களின் உயா் முன்னுரிமைகள். அமைதியும் வளா்ச்சியும் மாநில எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.