ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பதுங்கு குழிக்குள் இருக்குமாறு ராணுவ செயலாளர் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, ''இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதும் ராணுவ செயலாளர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்.
இந்தியாவுடன் போர் தொடங்கிவிட்டது. பாதுகாப்பு காரணத்திற்காக பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். தியாகம் என்பது விதிக்கப்பட்டிருந்தால் அது இங்கேயே நடக்கட்டும். தலைவர்கள் பதுங்கு குழிக்குள் இறக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தேன்'' எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை போர் தொடங்கும் பல நாள்களுக்கு முன்பே கனித்ததாகவும் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
இதில், பாகிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இந்தப்போரின்போதே, இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த முயன்றது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்துத் தடுக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
மே 10 ஆம் தேதி, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் தனது இந்திய பிரதிநிதியைத் தொடர்புகொண்டு போர் நிறுத்தத்திற்கு முன்மொழிந்ததை அடுத்து, இந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.