ஒடிசாவில் இறந்த தந்தை, மயக்கமடைந்த தாயுடன் இரவு முழுவதும் குளிரில் வனப் பகுதியில் 5 வயது சிறுவன் தனியாகக் கழித்துள்ளான்.
ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தில் ஜியானந்தபலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துஷ்மந்த் மஜ்ஹி மற்றும் ரிங்கி மஜ்ஹி. இத்தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். குடும்பத் தகராறு காரணமாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு தம்பதியினர் விஷம் அருந்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதில் தந்தை உடனே இறக்க, தாய் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். ஆனால் அந்தச் சிறுவன் இரவு முழுவதும் வனப்பகுதியில் குளிரில் தனியாக கழித்துள்ளான். பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் வழிப்போக்கர்களிடம் உதவி கேட்டபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து தியோகர் காவல் அதிகாரி தீரஜ் கூறுகையில், துஷ்மந்த் ஒரு மணி நேரத்திலேயே இறந்தார், அவரது மனைவி ரிங்கி மயக்கமடைந்தார்.
அந்தச் சிறுவன் அவர்கள் தரையில் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இரவு முழுவதும் அவர்ளுடன் இருந்துள்ளான். சூரிய உதயத்திற்குப் பிறகு சாலைக்கு வந்து மக்களிடம் உதவி கோரியுள்ளான். மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் ரிங்கி சிகிச்சை பலனின்றி பலியானார். பெற்றோரால் பூச்சிக்கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட போதிலும், சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான். சிறுவன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் அவனது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.