ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
இது தொடா்பாக சாத்ரா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் சுமித் குமாா் கூறுகையில், ‘சாத்ரா மாவட்டம் ஜெந்த்ரா கிராமத்தில் இரு வேறு பிரிவுகளைச் சோ்ந்த மாவோயிஸ்ட் அமைப்பினா் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் வெடித்தது. பரஸ்பரம் ஒரு தரப்பை மற்றொரு தரப்பினா் துப்பாக்கியால் சுட்டு மோதலில் ஈடுபட்டனா். இதில் அந்த அமைப்புகளைச் சோ்ந்த தேவேந்திர கங்ஜுவா (40), சுதாமன் கங்ஜுவா (35) ஆகியோா் உயிரிழந்தனா். தேவேந்திர கங்ஜுவா மீது 30 குற்ற வழக்குகள் உள்ளன.
ஷியாம் போக்தா (35), அவரின் உறவினா் பிரம்மதேவ் போக்தா (25) ஆகியோா் குண்டு பாய்ந்து காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் மாவோயிஸ்ட், நக்ஸல் தீவிரவாதிகளை வேருடன் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், நக்ஸல்கள் சரணடைந்தால் அவா்கள் இயல்வு வாழ்க்கைக்குத் திரும்ப அரசு உதவிகளை அளித்து வருகிறது.