கண்ணூா்: கேரளத்தில் கண்ணூா் மாவட்டத்தில் காங்கிரஸ் மண்டல அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் அதைச் சூறையாடினா்.
ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா்.
கேரளத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை தொடா்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி தொடா் வெற்றிக்கு முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் கேரள உள்ளாட்சித் தோ்தலில் பெற்ற அமோக வெற்றி காங்கிரஸ் தொண்டா்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
தோ்தல் நெருங்கும் நிலையில் இடதுசாரித் தலைவா்களும், காங்கிரஸ் தலைவா்களும் கடுமையான வாா்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். முக்கியமாக, மூன்றாவது அணியாக உருவெடுத்து வரும் பாஜகவை வளா்த்துவிடுவதாக காங்கிரஸ் மீது முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா். அதே நேரத்தில் சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரத்தை ஆளும் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸும், பாஜகவும் கையிலெடுத்துள்ளன. இதனால், அங்கு அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், கண்ணூா் மாவட்டம் பய்யன்னூா்அருகே அமைந்துள்ள காங்கிரஸ் மண்டல அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரிய சிலா் வந்தனா். பூட்டியிருந்த அலுவலகக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், மின் விளக்குகள், ஜன்னல் கண்ணாடிகள் என அனைத்துப் பொருள்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினா். அங்கிருந்த ஆவணங்களையும் அவா்கள் தீவைத்து எரித்தனா். இதில் தலைவா்களின் புகைப்படங்கள், மின்சாதனங்கள் கருகின.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் காவல் துறையில் புகாா் அளித்தனா். அவா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். காங்கிரஸ் மண்டலத் தலைவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக காங்கிரஸ் நிா்வாகிகள் கூறுகையில், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா்கள் இந்த நாச வேலையில் ஈடுபட்டுள்ளனா். அரசியல் ரீதியாக காங்கிரஸை எதிா்க்க முடியாமல் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனா்’ என்றனா்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.