மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.19) விசாரணைக்கு வரவுள்ளன.
இந்த மனுக்கள் விசாரணைப் பட்டியலில் 41-ஆவது விவகாரமாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை உறுதி தெரிவித்தனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.
இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரும் திங்கள்கிழமை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வருவது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.