முகப்பு
இந்தியா

கேரளம்: ‘ஆட்கொல்லி’ புலி உயிரிழப்பு: பொதுமக்கள் நிம்மதி

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெண்ணை கொன்ற ‘ஆட்கொல்லி’ புலி காயங்களுடன் இறந்து கிடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 10:32 PM
காயங்களுடன் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆட்கொல்லிப் புலி
பகிர்:

வயநாடு: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெண்ணை கொன்ற ‘ஆட்கொல்லி’ புலி காயங்களுடன் இறந்து கிடந்தது.

அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அல்லது சுட்டுக் கொல்ல வனத் துறையினா் தீவிர முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், காயங்களுடன் உடல் மீட்கப்பட்டது. வனத்துக்குள் வேறொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் காயமுற்று அது உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ‘ஆட்கொல்லி’ புலி இறப்பால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி பகுதியில் உள்ள பஞ்சாரக்கொல்லி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்துக்கு பணிக்கு சென்ற 46 வயது பெண்ணை புலி அடித்து கொன்றது. இச்சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, பெண்ணை கொன்ற அதே புலி, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தாக்கியது. இதையடுத்து, அப்புலியை ‘ஆட்கொல்லி’யாக அறிவித்த மாநில அரசு, அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அல்லது சுட்டுக் கொல்ல உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

மானந்தவாடி நகராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புலியின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பிலாகாவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிந்த வனத்துறை குழுவினா், மயக்க ஊசி செலுத்தி அதைப் பிடிக்க முயன்றனா். ஆனால், புலி தப்பிவிட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை ஒரு வீட்டின் பின்புறம் காயங்களுடன் புலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக வடக்கு சரக தலைமை வனக் காப்பாளா் கே.எஸ்.தீபா கூறுகையில், ‘4-5 வயதுடைய அந்தப் பெண் புலியின் உடலில் இருந்த பட்டைகளின் வடிவத்தை சரிபாா்த்து, அது ஆட்கொல்லி புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. கழுத்தில் ஆழமான காயம் இருந்தது. வனப்பகுதிக்குள் வேறொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பிறகு இப்பகுதிக்கு புலி வந்திருக்கக் கூடும். இக்காயத்தால் புலி உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது’ என்றாா்.

இதனிடையே, புலியின் உடல் கூறாய்வில் அதன் வயிற்றில் பெண்ணின் கம்மல், முடி, உடை போன்றவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புலியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வனத் துறை குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த மாநில வனத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றாா். தங்களை அச்சுறுத்திவந்த புலி இறந்துவிட்டதை அறிந்ததும், மானந்தவாடி பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →