மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளார்.
நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தனக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் இவர் உணவு கேட்க, ஊழியர் ஒருவரும் உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஊழியர் கொண்டுவந்த பருப்பு குழம்பைச் சாப்பிட்டு பார்த்த எம்எல்ஏ, இது கெட்டுபோனது என்று கூறி உணவகத்திற்குச் சென்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதை சமைத்தவர் யார் என்று கேட்டு அவரை வரவழைத்து கடுமையாக முகத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஊழியர் கீழே விழுந்தார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"உணவைச் சாப்பிட்டவுடன் எனக்கு வயிறு வலி, தலைச்சுற்றல் ஏற்பட்டது. எம்எல்ஏவுக்கே இந்த நிலைமை என்றால்.. மற்றவர்களுக்கு? நான் செய்தது தவறு அல்ல, இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. உணவு சரியில்லை என்று பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன், கேட்கவில்லை என்றால் இப்படித்தான். நான் எம்எல்ஏ மட்டுமல்ல, ஒரு போராளியும்கூட. சொல்வதை கேட்கவில்லை என்றால் பால் தாக்கரே எங்களுக்கு சொல்லி கொடுத்தது இதுதான். இது சிவசேனை ஸ்டைல். மகாராஷ்டிரத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போனவர். இடஒதுக்கீடு பற்றி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பேசி கடும் விமர்சனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.