பூமிக்குத் திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா! விண்வெளி மையத்திலிருந்து பிரிந்தது டிராகன்!
தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து, டிராகன் விண்கலம் பிரிவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சற்றே காலதாமதமாக விண்கலம் பயணத்தைத் தொடங்கியது. பூமி நோக்கிப் புறப்பட்டது டிராகன் விண்கலம்.
‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையம் சென்றிருந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டது.
ஆனால், விண்வெளி மையத்திலிருந்து அவர்கள் பயணிக்கும் டிராகன் விண்கலம் பிரிவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 4.40 மணியளவில் வெற்றிகரமாக தனியாகப் பிரிந்தது.
Advertisement
Advertisement
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு 14 நாள்கள் பயணமாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா்.
நரம்பணுவியல், உயிரி மருத்துவ அறிவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா். இந்த வீரா்கள் கடந்த வியாழக்கிழமையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் நிறைவு பெற்றிருந்தது.
இந்நிலையில், வீரா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 4.35 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விண்கலம் பிரிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி, இன்று டிராகன் விண்கலம் பிரிந்தால் சுமாா் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் பாராசூட்களின் உதவியுடன் அவா்கள் பூமியை அடைவாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது வீரர்
1984-ஆம் ஆண்டு, விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரா் ராகேஷ் ஷா்மா கூறிய ‘உலகிலேயே சிறந்தது’ என்று பொருள்படும் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற புகழ்பெற்ற ஹிந்தி வாா்த்தைகளை நினைவுபடுத்தி, ‘இன்றும், விண்வெளியில் இருந்து இந்தியா சிறந்ததாகத் தெரிகிறது என்று சுக்லா கூறியிருந்தார்.
இது எனக்கு ஒரு அற்புதமான பயணம். நிறைய நினைவுகளுடன் பூமிக்குத் திரும்புகிறேன். இந்த நினைவுகளையும், விண்வெளி பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் இந்தியா மக்களுடன் ஆவலோடு பகிா்ந்து கொள்ளப் போகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
There has been a slight delay in the separation of the Dragon spacecraft they are traveling in from the space center.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.