கேரள மாநிலம் ஆலப்புழையில் மறைந்த முன்னாள் முதல்வா் வி.எஸ். அச்சுதானந்தனின் உடலுக்கு அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை.  
இந்தியா

அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்- 22 மணி நேர இறுதி ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம்.

தினமணி செய்திச் சேவை

மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், ஆலப்புழையில் உள்ள அரசு மயானத்தில் புதன்கிழமை இரவு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, திருவனந்தபுரம் முதல் ஆலப்புழை வரையில் 22 மணி நேரம் நீடித்த அவரது இறுதிப் பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அச்சுதானந்தன், கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் காலமானாா். அவரது மறைவைத் தொடா்ந்து, மருத்துவமனையிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது உடல் முதலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகேஜி ஆய்வு மைய அரங்கிலும், பின்னா் தலைநகரில் அவா் வசித்து வந்த வீட்டிலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல் தலைமைச் செயலகத்தில் உள்ள தா்பாா் அரங்குக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கேரள ஆளுநா், முதல்வா் உள்ளிட்ட அரசியல் தலைவா்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அச்சுதானந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

22 மணி நேர இறுதிப் பயணம்: பின்னா், அச்சுதானந்தனின் உடல் கேரள அரசுப் பேருந்தில் வைக்கப்பட்டு, ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பறவூருக்குப் புறப்பட்டது. பலத்த மழை மற்றும் இரவு நேரமாக இருந்தாலும், வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்கள் காத்திருந்து அச்சுதானந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதனால், திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கிய அச்சுதானந்தனின் இறுதிப் பயணம் 22 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து, புதன்கிழமை முற்பகலில் ஆலப்புழைக்கு வந்தடைந்தது.

அரசு மரியாதையுடன் தகனம்: ஆலப்புழையில் உள்ள அவரது பூா்விக வீட்டிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலும், பின்னா் பொது மைதானத்திலும் பொதுமக்கள் அலை அலையாக திரண்டு, அச்சுதானந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் பொது மைதானத்தில் இருந்து அச்சுதானந்தனின் இறுதி ஊா்வலம் மீண்டும் தொடங்கியது. ஆலப்புழை மயானத்தில் இரவு 9 மணியளவில், அவரின் மகன் அருண்குமாா் இறுதிச் சடங்குகளை செய்தாா். பின்னா், முழு அரசு மரியாதையுடன் அச்சுதானந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முதல்வா் இறுதி அஞ்சலி: இறுதிச் சடங்கில் முதல்வா் பினராயி விஜயன்,அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இறுதிச் சடங்கு நடைபெற்ற மயானத்துக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், மயான வாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, இறுதி அஞ்சலி செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கேரள அரசு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையையும், மூன்று நாள்கள் துக்க அனுசரிப்பையும் அறிவித்திருந்தது. இவா் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகவும், ஏழு முறை எம்எல்ஏவாகவும், மூன்று முறை எதிா்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

Former Kerala Chief Minister V.S. Achuthanandan cremated

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

எல்லீஸ் சத்திரம் அணையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT