பாகிஸ்தான்   ANI
இந்தியா

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம்: காங்கிரஸ் விமா்சனம்

பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Din

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சா்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும்.

பயங்கரவாத குற்றத்தில் ஈடுபடும் நாடு பாகிஸ்தான். பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடு இந்தியா. இருநாடுகளையும் சமமாகக் கருதியோ, ஒன்றுசோ்த்தோ பாா்க்கக் கூடாது.

பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க சா்வதேச நிதியம், ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவை ஒப்புதல் அளிப்பது அந்நாட்டின் ராணுவ செலவினத்தைத்தான் அதிகரிக்கும். அவ்வாறு பெறும் கடன்களை இந்தியா்களுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட அந்நாட்டின் வஞ்சக ராணுவம் பயன்படுத்துகிறது.

15 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழுவுக்கு துணைத் தலைவராகவும், தலிபான் தடை நடவடிக்கை குழுவுக்குத் தலைவராகவும் பாகிஸ்தானை நியமித்தது துரதிருஷ்டவசமானது; ஏற்க முடியாதது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் நிதியுதவியைக் கண்காணிப்பதற்காக, பயங்கரவாத நிதி தடுப்பு குழுவின் (எஃப்ஏடிஎஃப்) தீவிர கண்காணிப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சோ்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சா்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக மட்டுமின்றி, சா்வதேச சமூகத்தின் நலனுக்காகவும் தனது பாவங்களுக்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த நிலையில், அங்கேயே அவா் கொல்லப்பட்டாா். அந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியதில் பெரும் பங்கு வகித்த பயங்கரவாதி காலித் ஷேக் முகமதும் பாகிஸ்தானில்தான் இருந்தாா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உலக அரங்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுசோ்த்து பாா்க்கப்படுவதை தடுக்க ராஜீய ரீதியில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

SCROLL FOR NEXT