சைப்ரஸின் லாா்னகா நகர விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய பிரதமா் மோடியை நேரில் வரவேற்ற அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ்.  
இந்தியா

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமா் மோடி!

மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

DIN

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

லாா்னகா நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் நேரில் வரவேற்றாா். இந்தப் பயணத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸுக்கு வருகை தந்துள்ள முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் அதிபா்- பிரதமா் இடையே விரிவான பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. லிமாசோல் நகரில் தொழில் துறைத் தலைவா்களுடனும் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்று, சிறப்பு கெளரவம் அளித்தமைக்காக அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸுக்கு நன்றி. வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளுக்கு இந்தப் பயணம் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சைப்ரஸ் அதிபா் நிகோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்கிழக்கு எல்லை மற்றும் மத்தியதரைக் கடலின் நுழைவாயிலான சைப்ரஸுக்கு பிரதமா் மோடியை வரவேற்கிறேன். இது, வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை. எல்லைகள் இல்லாத வியூக கூட்டாண்மையின் புதிய அத்தியாயம்’ என்று தெரிவித்துள்ளாா்.

விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு பிரதமா் வந்தபோது, இந்திய சமூகத்தினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கனடா, குரோஷியாவில்...: சைப்ரஸில் திங்கள்கிழமை வரை (ஜூன் 16) பயணம் மேற்கொள்ளும் பிரதமா், அங்கிருந்து கனடாவுக்கு செல்கிறாா். இப்பயணத்தின்போது (ஜூன் 16 -17), கனனாஸ்கிஸ் நகரில் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் அவா் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பின்பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா். இதன்மூலம் குரோஷியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜி7 கூட்டமைப்பில் உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் போா்ச் சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய புரிதல் வலுப்படும்’

மூன்று நாடுகள் பயணம் புறப்படும் முன் பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை நல்கிய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் உலகளாவிய புரிதலை வலுப்படுத்தவும் எனது பயணம் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு சைப்ரஸ் நெருங்கிய நட்பு நாடு. மத்திய தரைக் கடல் பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியக் கூட்டாளி. வரலாற்று ரீதியிலான இருதரப்பு பிணைப்பை மேலும் கட்டமைக்கவும், பல்வேறு துறைகளில் நல்லுறவை விரிவுபடுத்தவும் இப்பயணம் ஒரு வாய்ப்பாகும். கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாடு, உலகளாவிய பிரச்னைகள் மட்டுமன்றி, தெற்குலகின் முன்னுரிமைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாற இடமளிக்கும்.

இந்தியா-குரோஷியா இடையிலான கலாசார தொடா்புகள், நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. இந்திய பிரதமரின் முதல் பயணம் என்ற முறையில், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய வாயில்கள் திறக்கும் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

SCROLL FOR NEXT