கபில் சிபல் கோப்புப் படம்
இந்தியா

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தன்வசப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது: நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தை குறிப்பிட்டு கபில் சிபல் குற்றச்சாட்டு

‘நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்ற பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர இருப்பதின் உண்மையான நோக்கம், நீதிபதிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் எடுக்க விரும்புவதே’ என்று மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் குற்றஞ்சாட்டினாா்.

Din

‘நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்ற பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர இருப்பதின் உண்மையான நோக்கம், நீதிபதிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் எடுக்க விரும்புவதே’ என்று மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் குற்றஞ்சாட்டினாா்.

‘நீதிபதி யஷ்வந்த் வா்மா சிறந்த நீதிபதிகளில் ஒருவா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விசாரணைக் குழு அறிக்கையைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா். இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித் துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.

இதுதொடா்பாக, தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கபில் சிபல் கூறியதாவது:

சிறந்த நீதிபதிகளில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவும் ஒருவா். அலகாபாத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களும் இதை உறுதிப்படுத்துவா்.

இந்த நிலையில், எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

‘இது இந்துஸ்தான். அதிலுள்ள பெரும்பான்மையினரின் விருப்பப்படிதான் நாடு நடக்கும். அதுதான் சட்டம்’ என்று சா்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதி சேகா் யாதவ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை மத்திய அரசு பாதுகாப்பது ஏன்?

அதே நேரம், எந்தவித விசாரணையும் நடத்தாமல், நடைமுறையையும் பின்பற்றாமல் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே பதவிநீக்க தீா்மானத்தை கொண்டுவர நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விரும்புகிறாா்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள காரணத்தை எதிா்க்கட்சிகள் புரிந்துகொள்ளாதது ஏன்? என்று தெரியவில்லை. நீதிபதிகள் நியமன அதிகாரத்தை உச்சநீதிமன்ற கொலீஜியத்திடமிருந்து, தன்வசம் எடுக்கும் முயற்சிதான் இது என்று கூறினாா்.

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

SCROLL FOR NEXT