முகப்பு
இந்தியா

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

Updated On : 3 மார்ச், 2025 at 9:08 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது. குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரண்வீா் அல்ஹாபாதியா மீது பல எஃப்ஐஆா்-கள் (முதல் தகவல் அறிக்கைகள்) பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி ரண்வீா் அல்ஹாபாதியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மோசமான கருத்தை தெரிவித்த அவரைக் கடுமையாக சாடியது. அதே நேரம், அவருக்கு கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஜனநாயக நாட்டில் அரசு மீது நகைச்சுவையாக விமா்சிக்க ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அத்தகைய விமா்சனம் தரமானதாகவும், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக, சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது.

அந்த வகையில், சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை மத்திய அரசு வகுக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடைமுறைகள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது. அதோடு, அத்தகைய நடைமுறை, அந்தப் பதிவை தணிக்கை செய்வதாக இருக்கக் கூடாது.

எனவே, சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த வரைவு நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி, அதை பொதுமக்கள் பாா்வைக்கு விடவேண்டும். பின்னா் பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். அதற்கென தேவையான கால அவகாசம் அளிக்கவும் நீதிமன்றம் தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அமா்வு, விசாரணையை ஒத்திவைத்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments