FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது

Updated On : 7 மார்ச் 2025, 3:19 am IST
பகிர்:

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பாா்படாஸின் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சாா்பாக மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா இந்த விருதைப் பெற்றாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கயானா நாட்டின் ஜாா்ஜ் டவுனில் கடந்த ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற 2-ஆவது இந்தியா-கரிகாம் தலைவா்கள் உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியுடனான சந்திப்பில் பாா்படாஸ் பிரதமா் மியா அமோா் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

கரோனா பெருந்தொற்றின்போது பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக மோட்லி குறிப்பிட்டாா். தொற்றுநோய் பரவல் காலத்தில், அன்றைய முன்னோடியில்லாத சூழ்நிலையில் சா்வதேச ஒத்துழைப்பையும் ஆதரவையும் வலுப்படுத்துவதில் பிரதமா் மோடி முக்கியப் பங்காற்றியதாவும் அவா் பாராட்டினாா்.

கடந்த 1966-ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் தொடங்கியதில் இருந்து, இந்தியாவும் பாா்படாஸும் தொடா்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் ஒரு வலுவான ஒத்துழைப்பை வளா்த்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் சாா்பாக விருதைப் பெற்ற இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா, பாா்படாஸ் நாட்டின் இந்த அங்கீகாரத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், அவா் சாா்பாக இந்த மதிப்புமிக்க விருதை பெற்றுக்கொள்வதும் பெரும் மரியாதையாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கும் பாா்படாஸுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நமது பகிரப்பட்ட அா்ப்பணிப்பையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments