பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றத்துக்கு வழிவகுத்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரையும் திருப்பிச் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முப்படை தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், போர் ஏற்படலாம் என்ற நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்த பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் வலுவான ஆதரவு இருக்கும்.அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது. இந்தியா பாதுகாத்துக் கொள்ளும் உரிமையையும் அமெரிக்கா ஆதரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதற்கு ஒருநாள் கழித்து பாதுகாப்பு அமைச்சர், அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் மார்கோ ரூபியோ பேசி, பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிக்க: தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.