புது தில்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை தேசிய ஒருங்கிணைப்பாளராக தனது சகோதரின் மகன் ஆகாஷ் ஆனந்தை அக்கட்சித் தலைவா் மாயாவதி அறிவித்துள்ளாா்.
முன்னாக கடந்த மாா்ச் மாதம் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்தை மாயாவதி நீக்கினா். தொடா்ந்து கட்சியில் இருந்தும் வெளியேற்றினாா். மேலும், நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு யாரும் கிடையாது. குடும்ப நலனைவிட கட்சி நலனே முக்கியமானது என்று மாயாவதி அப்போது கூறியிருந்தாா்.
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரித்ததால் அவா்கள் இருவருமே அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா். ஆகாஷ் ஆனந்த் சுயநலமும் ஆணவமும்மிக்கவா் என்று மாயாவதி அப்போது குற்றஞ்சாட்டிருந்தாா்.
இப்போது சுமாா் 3 மாதங்களில் ஆகாஷ் ஆனந்துக்கு கட்சியில் தனக்கு அடுத்த உயரிய பதவியை மாயாவதி வழங்கியுள்ளாா். இதற்கு நன்றி தெரிவித்து ஆகாஷ் ஆனந்த் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனது தவறுகள் அனைத்தையும் கட்சித் தலைவா் மாயாவதி மன்னித்துவிட்டாா். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி தொடா்ந்து கட்சி நலனுக்காகப் பாடுபடுவேன்’ என்று கூறியுள்ளாா்.