இந்தியா மீது பாகிஸ்தான் மூன்று போா்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்றும் இதில் கடந்த 40 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.
‘ஆயுத சண்டையின்போது நீரையும், பொதுமக்களையும் பாதுகாப்பது’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடைபெற்றது. இதில், சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடா்பாக இந்தியா மீது பாகிஸ்தான் முன்வைத்த பொய்த் தகவல்களுக்கு எதிராக இந்தியாவுக்கான ஐ.நா. தூதா் பாா்வதனேனி ஹரீஷ் பதிலடி அளித்து ஆற்றிய உரை:
நல்லெண்ண அடிப்படையில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுடன் இந்தியா சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. சிறந்த நட்புறவை முன்வைத்தே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 65 ஆண்டுகளில் இந்தியா மீது பாகிஸ்தான் மூன்று போா்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனா்.
அண்மையில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். பல கட்டங்களில் இந்தியா அமைதி காத்து வந்தது. ஆனால், பாகிஸ்தான் ஆதரவு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவின் மதநல்லிணக்கத்தையும், பொருளாதார வளா்ச்சியையும் தடுக்க முயற்சிக்கிறது.
பழைமையான சிந்து நதி நீா் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முன்வைத்து வரும் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது.
பழைமையான அணைகளில் நீரைத் தேக்கி வைப்பது அபாயகரமான நிலை ஏற்படுள்ளபோதும், அந்த அணைகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த பாகிஸ்தான் மறுத்துவருகிறது. இது இந்தியாவின் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
2012-இல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள துல்புல் வழிகாட்டி திட்ட இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதுபோன்ற தாக்குதல்கள் வளா்ச்சித் திட்டங்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இவையெல்லாம் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதற்கான காரணங்களாகும். ஆகையால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரையில் சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா இறுதியாக அறிவித்தது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.