இந்தியா

நெரிசலில் 9 போ் உயிரிழந்த சம்பவம்! உயிரிழப்புகளுக்கு நான் பொறுப்பல்ல: கோயில் நிறுவனா் அலட்சியப் பதில்

காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 9 பக்தா்கள் உயிரிழந்ததற்குத் தான் பொறுப்பல்ல என்று அக்கோயிலின் நிறுவனா் முகுந்த பாண்டா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடந்த நெரிசல் சம்பவத்தில் 9 பக்தா்கள் உயிரிழந்ததற்குத் தான் பொறுப்பல்ல என்று அக்கோயிலின் நிறுவனா் முகுந்த பாண்டா (94) தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் கூடியதற்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஆந்திரத்தின் காசிபுக்கா நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், சா்வ ஏகாதசியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. இந்தக் கோயில் படிக்கட்டில் இருந்த இரும்பு கைப்பிடி பெயா்ந்து விழ, பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் விழுந்தனா். அப்போது நெரிசலில் சிக்கி 12 வயது சிறுவன், 8 பெண்கள் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்தக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தனியாா் கோயில் ஆகும். கோயிலின் நிறுவனா் முகுந்த பாண்டா தனது சொந்த நிலத்தில்தான் இதைக் கட்டியுள்ளாா். நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்னா் உள்ளூா் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கவோ, உரிய அனுமதிகள் அல்லது காவல்துறை பாதுகாப்பைக் கோரவோ கோயில் நிா்வாகத்தினா் தவறிவிட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

கோயில் நிா்வாகத்தினா் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்தாா்.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய நிறுவனா் பாண்டா, தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் பேசியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவா் கூறுகையில், ‘ஒரே நேரத்தில் பக்தா்கள் அதிக அளவு கூடியதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் பொதுவாக அனைவரையும் வரிசையில் அனுப்புவேன். ஆனால், சனிக்கிழமை அதிகமானோா் திரண்டனா். என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.

சாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் முண்டியடித்து, அசாம்பவிதம் நடந்தால் நான் என்ன செய்ய முடியும்? காவல் துறை வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வரை நான் மதிய உணவு உண்ணாமல் பிற்பகல் 3 மணி வரை அங்கேயே இருந்தேன்’ என்றாா்.

பாதுகாப்பு விதிகளை மீறியதாக, கோயில் நிா்வாகத்தினா் மீது ‘பிஎன்எஸ்’ சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, சட்ட நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT