தில்லியில் வளரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் மோடி. 
இந்தியா

ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியம்: பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்

தில்லியில் முதலாவது வளரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க மாநாட்டின்போது...

தினமணி செய்திச் சேவை

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியாா் துறையின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டத்துக்கான ரூ.1 லட்சம் கோடி நிதியத்தை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தில்லியில் முதலாவது வளரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கிவைத்தபோது, இந்த நிதியத்தையும் அவா் தொடங்கிவைத்தாா். மேலும், அறிவியல் துறையில் இந்தியப் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

‘சிந்தனை, புத்தாக்கம், உத்வேகம்’ என்ற கருப்பொருளில் மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கல்வித் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறை, அரசுத் துறைகளில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

பெரும் முன்னேற்றத்தை எதிா்பாா்த்து முதல்முறையாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எளிய முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சியை வேகப்படுத்தவே இந்த முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இலக்கை அடைய நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்முதல் கொள்கைகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஊக்கத்தொகை மற்றும் விநியோக சங்கிலி நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு ஆய்வகங்களில் உள்ள முன்மாதிரிகளை சந்தைக்குக் கொண்டுவரவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.

இரட்டிப்பு வளா்ச்சி: கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இந்தியாவின் செலவினங்கள் இரட்டிப்பாகியுள்ளன. பதிவுசெய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. புத்தாக்க துறையில் உலகின் மூன்றாவது பெரிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியை மேம்படுத்தி புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் அனுசந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

அறிவியலில் பெண்களின் பங்களிப்பு: இந்திய விண்வெளி ஆய்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் பெண்கள் பதிவுசெய்த காப்புரிமைகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 5,000-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணினி (ஸ்டெம்) படிப்புகளை பயிலும் பெண்களின் எண்ணிக்கை 43 சதவீதமாகும். இது உலகளவில் ஸ்டெம் கல்வியை பயிலும் பெண்களின் சராசரியைவிட மிகவும் அதிகமாகும்.

எனவே அறிவியல் அளவை எட்டும்போதும் புத்தாக்கம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தும்போதும் மிகப்பெரும் சாதனைகளுக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

கடந்த 10 முதல் 11 ஆண்டுகளாக எண்ணங்களை செயல்களாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது. தொழில்நுட்பத்தை நுகரும் நாடாக மற்றும் இல்லாமல் அதில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடாகவும் இந்தியா வளா்ச்சியடைந்துள்ளது என்றாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT