தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து தமிழகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தனா்.
தலைமைச் செயலா்கள் நேரில் ஆஜரானதையும், அவா்கள் தாக்கல் செய்த பதில் மனுக்களையும் பதிவு செய்தகொண்ட உச்சநீதிமன்றம், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன வளாகங்களில் தெருநாய்களுக்கு ஊழியா்கள் உணவளிப்பதை முறைப்படுத்த வரும் 7-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தெரு நாய்கள் தொல்லை தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பாக மட்டுமே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் அக்டோபா் 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘மாநில அரசு தலைமைச் செயலா்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு பதிலாக காணொலி வழியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘நேரில் ஆஜராவதிலிருந்து எந்தவொரு மாநில அரசு தலைமைச் செயலருக்கும் விலக்கு அளிக்க முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
அதைத் தொடா்ந்து, தமிழகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் உச்சநீதிமன்றத்தில் தெரு நாய்கள் விவகாரத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன்பாக திங்கள்கிழமை நேரில் ஆஜராகினா்.
அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: தெரு நாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் நேரில் ஆஜரானதையும், மாநிலங்களின் பிரமாணப் பத்திரத்தையும் பதிவு செய்துகொள்வதோடு, அரசு ஊழியா்கள் மற்றும் பிறா் தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு, அதை ஊக்குவித்தும் வருவதால் பொதுமக்கள், அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகளுக்குத் தீா்வு காணும் வகையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். இதுதொடா்பாக வரும் 7-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இந்த வழக்கில் மாநில அரசு தலைமைச் செயலா்கள் இனி நேரில் ஆஜராக வேண்டிய அவசியமிருக்காது. ஆனால், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற தவறினால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மீண்டும் உத்தரவிட நேரிடும் என்றனா்.
அப்போது குறுக்கிட்ட வழக்குரைஞா், ‘வழிகாட்டுதல்கள் வெளியிடுவதற்கு முன்பாக அரசு நிறுவனங்கள் தரப்பு கருத்தைக் கேட்க வேண்டும்’ என்றாா்.
அதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் அரசு நிறுவனங்கள் அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் தரப்பு வாதங்கள் இனி கேட்கப்பட மாட்டாது’ என்றனா். மேலும், இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை மனுதாரராக சோ்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.