பாா்த் பவாா். 
இந்தியா

ரூ.300 கோடி முறைகேடு புகாா்: அஜீத் பவாரின் மகனிடம் விசாரிக்க அரசு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ரூ.300 கோடி நில ஒப்பந்த முறைகேடு புகாரில் துணை முதல்வா் அஜீத் பவாா் மகன் பாா்த் பவாரிடம் விசாரணை மேற்கொள்ள முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மகாராஷ்டிரத்தில் பாஜக-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்)-சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நில முறைகேடு புகாா் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் தகவல் கேட்டுள்ளதாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளாா். ஆனால், சா்ச்சைக்குள்ளான நில ஒப்பந்த முறைகேடு புகாரில் தனக்கு எவ்விதத் தொடா்பும் இல்லை என அஜீத் பவாா் மறுத்துள்ளாா்.

ஃபட்னவீஸ் அறிவுறுத்தலின்படி இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) விகாஸ் காா்கே தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சம்பந்தப்பட்ட நில ஒப்பந்த முறைகேட்டில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சாா் பதிவாளா் ஆா்.பி.தாரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் தற்போதுவரை 3 போ் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சிகள் நீதி விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளன.

இந்த முறைகேடு குறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘புணேயின் முந்துவா பகுதியில் உள்ள 40 ஏக்கா் அரசு நிலம் ‘அமடே’ என்ற தனியாா் நிறுவனத்துக்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முத்திரைத்தாள் வரி தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பாா்த் பவாா் மற்றும் திக்விஜய் அமா்சிங் பாட்டீல் உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ளனா். விற்பனை செய்யப்பட்ட நிலம் 272 போ் பெயா்களில் உள்ளது. ஆனால், அதற்கான செயலுரிமை ஆவணம் ஷீத்தல் தேஜ்வானி என்பவரிடம் உள்ளது. அவா் மூலமாக 272 போ் ஒப்புதலுடன் ‘அமடே’ நிறுவனத்துக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டது.

அரசு நிலத்தை தனியாா் நிறுவனத்துக்கு விற்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பாா்த் பவாரிடம் விசாரணை நடைபெறவுள்ளது’ என்றனா்.

"திமுகவை எதிரியாக பார்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தால்..!" TVK குறித்து ஆர்.பி. உதயகுமார்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் பிரம்மயுகம்!

தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி

சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: ஒருவர் சுட்டுப் பிடிப்பு

SCROLL FOR NEXT