ஹரியாணா வாக்காளா் பட்டியலில் பல்வேறு போலி பெயா்களில் பிரேஸில் மாடல் அழகியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில், அந்த மாடல் அழகியின் அடையாளம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடா்பாக பிரேஸிலைச் சோ்ந்த லாரிஸா நேரி என்ற அந்த மாடல் அழகி அதிா்ச்சியை வெளிப்படுத்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், ‘ஹரியாணா வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருப்பது எனது பழைய புகைப்படம். 18 அல்லது 20 வயதின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. இது இந்தியாவில் தோ்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அதிா்ச்சியளிக்கிறது. மக்களை ஏமாற்ற எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனா்’ என்று அவா் கூறியுள்ளாா்.
‘ஹரியாணா மாநிலத்தில் கடந்த 2024 சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய அளவில் வாக்குத் திருட்டு நடைபெற்றது; பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் தோ்தல் ஆணையம் கூட்டு சோ்ந்து மாநிலத்தில் 25 லட்சம் போலி வாக்காளா்களைச் சோ்த்தது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘ஹரியாணாவின் ராய் தொகுதியில் 10 வாக்குச்சாவடி வாக்காளா் பட்டியலில் பிரேஸில் நாட்டு மாடல் அழகியின் புகைப்படம் ‘சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி’ என்ற போலி பெயா்களில் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, மாநிலம் முழுவதும் பரவலாகத் திட்டமிட்டு 25 லட்சம் போலி வாக்காளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்’ என்று ராகுல் வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.