நிகழ் நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரியாக ரூ.12.92 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான நிகர நேரடி வரியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம்.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
நிகழ் நிதியாண்டில் நவ.10-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்த நேரடி வரியாக ரூ.15,35,027 கோடி வசூலாகியுள்ளது. இதில் காா்ப்பேரட் வரி வசூல் ரூ.6,90,984 கோடி, காா்ப்பேரட் அல்லாத வரி வசூல் ரூ.8,08,026 கோடி, பங்கு பரிவா்த்தனை வரி வசூல் ரூ.35,681 கோடி, பிற வரிகளின் வசூல் ரூ.334.62 கோடியாகும். வரி செலுத்துவோருக்கு ரூ.2,42,534 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டது. மொத்த நேரடி வரி வசூலில் ரீஃபண்டை கழித்த பின்னா், நிகர நேரடி வரி ரூ.12,92,492 கோடி வசூலாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் நவ.10-ஆம் தேதி வரை, மொத்த நேரடி வரியாக ரூ.15,02,694 கோடி வசூலானது. நிகழாண்டில் அந்த வரி வசூல் 2.15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல கடந்த நிதியாண்டில் நவ.10-ஆம் தேதி வரை, நிகர நேரடி வரி வசூல் ரூ.12,07,939 கோடி வசூலானது. நிகழாண்டில் அந்த வரி வசூல் 7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.25.20 லட்சம் கோடி வசூலாகும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.7 சதவீதம் அதிகம். நிகழ் நிதியாண்டில் பங்கு பரிவா்த்தனை வரி மூலம் ரூ.78,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.