பிகார் வரலாற்றில் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நிதீஷ் குமார், சட்ட மேலவைப் பதவிக்கு மட்டுமே போட்டியிட்டுள்ளார்.
கடந்த 1985 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு நிதீஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் 1995 பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.
பிகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் குறுகிய காலத்தை தவிர, 9 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர் நிதீஷ் குமார்.
இவர், முதன்முதலில் 1977 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்தார். பின்னர், அடுத்தடுத்து 1980, 1985 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட நிதீஷ் குமார், 1985 ஆம் ஆண்டு முதல்முறையாக வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
அதன்பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய நிதீஷ் குமார் தொடர்ந்து 6 முறை மக்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1989 ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பர்ஹ் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், தொடர்ந்து 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
2004 மக்களவைத் தேர்தலில் பர்ஹ் மற்றும் நாளந்தா ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட நிதீஷ் குமார், நாளந்தா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். அதன்பிறகு, நிதீஷ் குமார் எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.
2014 மற்றும் 2015 -க்கு இடைப்பட்ட 9 மாதங்களைத் தவிர, கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவி வகித்து வருகிறார். 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதீஷ் பதவி விலகினார். ஜிதன் ராம் மஞ்சி முதல்வரானார். பின்னர், 2015 சட்டப்பேரவைத் தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிதீஷ் குமார், 2017-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.
மத்திய அமைச்சராக...
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1998 முதல் 1999 வரை ரயில்வே, வேளாண் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதீஷ் பதவி வகித்துள்ளார்.
கைசல் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார், மீண்டும் 2001 முதல் 2004 வரை மத்திய ரயில்வே மற்றும் வேளாண் அமைச்சராக இருந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலை நிதீஷ் தவிர்ப்பது ஏன்?
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்ற நிதீஷ் குமார், சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை ஆகிய இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. இதனிடையே, 8 நாள்களில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது.
மீண்டும் 2005 ஆம் ஆண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிதீஷ் முதல்வராக பதவியேற்றார். பின்னர் சட்டமேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து சட்டமேலவை உறுப்பினராகவே நிதீஷ் தொடர்கிறார்.
நாட்டில் சட்டமேலவை கொண்ட 6 மாநிலங்களில் பிகாரும் ஒன்று. சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல், சட்டமேலவை உறுப்பினர்கள் அமைச்சர் பதவியை வகிக்க வழிவகை செய்கிறது. 2012 ஆம் ஆண்டும் நிதீஷின் எம்எல்சி பதவி முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேர்தலைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அப்போது பதவியேற்ற நிதீஷ் பேசியது: “சட்டமேலவை மரியாதைக்குரிய அவை என்பதால், தனது விருப்பத்தின் பேரில் இந்த அவையின் உறுப்பினராகியுள்ளேன், எந்தவொரு கட்டாயத்தினாலும் அல்ல. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவேன்” என்றார்.
2015 தேர்தலின்போது, நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால், ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்த முடியும், ஆகையால், போட்டியிட விரும்பவில்லை என்று நிதீஷ் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 2024 ஆம் ஆண்டு சட்டமேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாரின் பதவிக்காலம், 2030 வரை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.