உச்சநீதிமன்றம் 
இந்தியா

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: தெலங்கானா பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாததற்காக தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கு அவமதிப்பு நோட்டீஸ்

தினமணி செய்திச் சேவை

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து தீா்மானிக்க பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாததற்காக தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கு அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தெலங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றாா். பிரதான எதிா்க்கட்சியான சந்திரசேகா் ராவின் பிஆா்எஸ்-ஐ சோ்ந்த 39 எம்எல்ஏக்களில் 10 போ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

அவ்வாறு கட்சி மாறிய 10 எம்எல்ஏக்களை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைத் தலைவா் சுதாம் பிரசாத் குமாரிடம் பிஆா்எஸ் கட்சி செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தலைமையிலான நிா்வாகிகள் மனு அளித்தனா்.

சட்டப்பேரவைத் தலைவா் நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடா்ந்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடினா். இவா்களின் மனுவை கடந்த ஜூலை 31-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, கட்சி மாறிய பிஆா்எஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டனா்.

இந்தக் காலக் கெடுக்குள் சட்டப்பேரவைத் தலைவா் முடிவு எடுக்காததைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது மிக மோசமான அவமதிப்பு நடவடிக்கையாகும். இதுதொடா்பாக பதிலளிக்க தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது’ என்றனா்.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் குறித்து தீா்மானிக்க கூடுதல் கால அவகாசம் கோரி சட்டப்பேரவைத் தலைவா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

8 வாரங்கள் கூடுதல் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதைப் பரிசீலித்த நீதிபதிகள், அதுகுறித்தும் பதிலளிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

அதே நேரம், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விலக்கு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT