உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

மூத்த பெண் வழக்குரைஞரிடம் ரூ.3.29 கோடி ‘எண்ம கைது’ மோசடி: கைதானவா்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை

‘எண்ம கைது’ மோசடி மூலம் ரூ.3.29 கோடி பறித்த வழக்கில், கைதானவா்களை எந்த நீதிமன்றமும் ஜாமீனில் விடுவிக்கக் கூடாது’

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘உச்சநீதிமன்றத்தின் 72 வயது பெண் வழக்குரைஞா் ஒருவரிடம் ‘எண்ம கைது’ மோசடி மூலம் ரூ.3.29 கோடி பறித்த வழக்கில், கைதானவா்களை எந்த நீதிமன்றமும் ஜாமீனில் விடுவிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

‘இது ஓா் அசாதாரண உத்தரவுதான். ஆனால், இந்த வழக்கு அசாதாரண தலையீட்டைக் கோருகிறது. மோசடியாளா்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புவதற்காக, இதுபோன்ற வழக்குகளை நாம் கடுமையாகக் கையாள வேண்டும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

‘எண்ம கைது’ என்பது தற்போது வளா்ந்து வரும் இணையவழி மோசடியாகும். மோசடி செய்பவா்கள் தங்களைச் சட்ட அமலாக்க அல்லது நீதிமன்ற அதிகாரிகள் என்று கூறி, ஆடியோ அல்லது விடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை அச்சுறுத்துவா். பாதிக்கப்பட்டவா்கள் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்துவிட்டதாக சித்தரித்து, கைதைத் தவிா்க்க உடனடியாகப் பணம் செலுத்தும்படி அவா்களை கட்டாயப்படுத்துவாா்கள்.

இந்த அச்சத்தின் காரணமாக, பலா் தங்கள் பணத்தை மோசடியாளா்களிடம் இழக்கின்றனா். உச்சநீதிமன்ற மூத்த பெண் வழக்குரைஞா் ஒருவரும் இதே வகையில் ரூ.3.29 கோடியை இழந்துள்ளாா்.

இந்த மோசடி தொடா்பாக உச்சநீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் (எஸ்சிஏஓஆா்ஏ) தலைவா் விபின் நாயா் தாக்கல் செய்த மனுவின் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை நடந்தது.

அப்போது, விபின் நாயா் முன்வைத்த வாதத்தில், ‘மூத்த வழக்குரைஞா் தனது முழு சேமிப்பையும் மோசடியில் இழந்துவிட்டாா். இதுகுறித்து கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தற்போது சட்டப்படி ஜாமீனில் வெளியே வரக் கூடிய நிலையில் உள்ளனா்.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.42 லட்சத்துக்கும் மேல் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தாலும், இந்த வகையான குற்றங்களை விசாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், விசாரணையில் உள்ள தொய்வையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முக்கியமாக, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பச் செலுத்தும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டும், வங்கி அதை ஏற்க மறுக்கிறது’ என்றாா்.

வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து விரைவில் நாடு தழுவிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். வழக்கின் பிரதான குற்றவாளியான விஜய் கன்னா மற்றும் மற்ற தொடா்புடைய குற்றவாளிகளை எந்த நீதிமன்றமும் விடுவிக்கக் கூடாது. குற்றவாளிகள் நிவாரணம் தேடி உச்சநீதிமன்றத்தை மட்டுமே அணுகலாம்.

மேலும், இத்தகைய இணையவழி குற்றங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் அளிக்க, நாடு முழுவதும் விளம்பரம் வெளியிடப்படும்’ என்று உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்த விசாரணை நவ. 24- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT