மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதை விரைவுபடுத்துமாறு மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடியைச் சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு அளித்தார்.
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை சந்தித்து 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்தச் சந்திப்பின்போது கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கெüடா, அரசு கூடுதல் தலைமைச் செயலர் அஞ்சும் பெர்வீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, ஜல்சக்தி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 13,000 கோடியை விடுவிப்பது, மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு விரைவாக அனுமதி அளிக்க மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடுவது, கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 2,136 கோடி ஒதுக்குவது தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் சித்தராமையா முன்வைத்தார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக முதல்வர் சித்தராமையா அளித்த மனுவில், "ராஜஸ்தானுக்குப் பிறகு நாட்டின் மிக வறட்சியான இரண்டாவது மாநிலம் கர்நாடகம். இதற்காகவே நீர்ப்பாசனத் திட்டங்களை கர்நாடகத்தில் செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டங்கள் மாநிலத்தின் நிலங்களை விளைநிலங்களாக மாற்ற உதவியாக இருந்துள்ளது. வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் நவ. 13}ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதை அறிந்திருப்பீர்கள். மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய நீர் ஆணையத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய நீர் ஆணையத்துக்கு வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு புது தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். நிகழாண்டில் அதிக அளவில் தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டினால், அதில் 86 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இது தமிழகத்துக்கு உதவியாக இருக்கும். மேலும், பெங்களூருக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மேக்கேதாட்டு அணையைக் கட்டும் தேவையுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.