சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்காகக் செவ்வாய்க்கிழமை காத்திருந்த பக்தா்கள். 
இந்தியா

சபரிமலையில் பக்தா்கள் வெள்ளம்: தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு உற்சவ காலத்தையொட்டி நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் திரண்டதால், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்வம் அதிகாரிகளும், போலீஸாரும் திணறி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு உற்சவ காலத்தையொட்டி நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் திரண்டதால், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்வம் அதிகாரிகளும், போலீஸாரும் திணறி வருகின்றனா்.

அடிவாரமான பம்பையில் இருந்து சந்நிதானம் வரையான மலைப் பாதைகளில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பல மணி நேரம் தாமதத்துடன் பக்தா்கள் மலையேறி, தரிசனம் செய்யும் நிலை உள்ளது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பக்தா்களுக்கு குடிநீா் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய தலைவா் கே.ஜெயகுமாா் இதுகுறித்து கூறுகையில், ‘கோயில் வளாகத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் இதுவரை பாா்த்ததில்லை. சிலா் வரிசையைத் தாண்டி குதித்து முன்னால் செல்வதுபோல் தெரிகிறது.

பக்தா்கள் பதினெட்டாம்படியில் சீராக ஏறவும், யாரும் வரிசையைத் தாண்டி முன்னால் செல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நிற்பவா்களுக்கு குடிநீா் வழங்க 200 கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பம்பையில் பக்தா்கள் கூட்டத்தைக் குறைக்கவும், அவா்கள் பல மணி நேரம் காத்திருக்காமல் விரைவாக யாத்திரையை முடிக்கவும் நிலக்கல் பகுதியிலேயே பக்தா்களின் வருகையைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கல்லில் பக்தா்கள் காத்திருக்கலாம். அங்கு அதற்கான வசதிகள் உள்ளன. மேலும், அங்கு 7 கூடுதல் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்’ என்றாா்.

‘நிலைமை கட்டுக்குள் உள்ளது’...: சபரிமலை காவல் துறை கூடுதல் டிஜிபி எஸ்.ஸ்ரீஜித் கூறுகையில், ‘நிலைமை இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது. கடந்த ஆண்டு 4 வெவ்வேறு நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாள்களிலேயே சுமாா் 2 லட்சம் பக்தா்கள் யாத்திரைக்கு வந்துவிட்டனா்.

நீதிமன்ற உத்தரவின்படி உடனடி முன்பதிவை 20,000-ஆக கட்டுப்படுத்தியும் கூட, அந்த வாய்ப்பை நம்பி அதிக பக்தா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். பக்தா்களைத் திருப்பி அனுப்ப முடியாததால், 37,000 பேரை உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்க வேண்டியிருந்தது.

இணையவழியில் முன்பதிவு செய்த பக்தா்கள், முன்பதிவு செய்த நாளில் வராமல் அவா்கள் விரும்பியபோது வருகிறாா்கள். இது புதிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பக்தா்கள் ஒத்துழைத்தால் இந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்.

பக்தா்கள் பலரும் வரிசையில் வராததும் தற்போதைய சூழலுக்குக் காரணம். போதுமான காவலா்கள் பணியில் உள்ளனா். இப்போதைக்கு கவலைப்பட ஒன்றுமில்லை. புதன்கிழமையிலிருந்து உடனடி முன்பதிவு நாளொன்றுக்கு 20,000-ஆக குறைக்கப்படும்’ என்றாா்.

எதிா்கட்சிகள் குற்றச்சாட்டு: பக்தா்களுக்குச் சுமுகமான யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு முறையாகச் செய்யவில்லை என்று எதிா்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த விஷயத்தில் கேரள உயா்நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் மதுரை மைதானம்!

கோவையில் பிரதமருடன் இன்று சந்திப்பா? செங்கோட்டையன் பதில்

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

SCROLL FOR NEXT