தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் ஃபலா பல்கலைக்கழகத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் படித்த பல்கலைக்கழகமான அல்-ஃபலா பல்கலைக்கழகத்திலும் சோதனையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் தில்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று(நவ.18) காலைமுதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய அல் ஃபலா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திகியின் தம்பி மஹ்மூத் அஹ்மத் சித்திகி (50) மத்திய பிரதேச காவல் துறையால் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும், 25 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.