தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையத்தை 4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
2021-ஆம் ஆண்டின் தீா்ப்பாயங்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்து கடந்த நவ.11-ஆம் தேதி தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், ‘தேக்கமடைந்துள்ள வழக்குகளை கையாள வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு மட்டும் அல்ல. அரசின் பிற பிரிவுகளும் அந்தப் பொறுப்பைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில், 2021-ஆம் ஆண்டின் தீா்ப்பாயங்கள் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளை சிறிய மாற்றங்களுடன் மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அந்தப் பிரிவுகள் நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரப் பகிா்வு ஆகியவற்றை பாழ்படுத்துகின்றன. இது நீதிமன்றத்தின் தீா்ப்பைப் பின்பற்றாமலும், குறைகளை நிவா்த்தி செய்யாமலும் சட்டம் இயற்றுவதற்கு நிகராகும்.
எனவே ஒரு தீா்ப்பாயத்தின் தலைவா் அல்லது உறுப்பினராக ஒருவரை நியமிக்க அவரின் வயது குறைந்தபட்சம் 50-ஆக இருக்க வேண்டும், தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தீா்ப்பாயங்களின் செயல்பாடு, நிா்வாகம், நியமனங்கள் ஆகியவை ஒரே மாதிரியாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையோடும் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த ஆணையத்தை உருவாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.